விழுப்புரம் அருகே தனித்தனி சம்பவம் மின்சாரம் தாக்கி 2 விவசாயிகள் சாவு
விழுப்புரம் அருகே தனித்தனி சம்பவம் மின்சாரம் தாக்கி 2 விவசாயிகள் சாவு
விழுப்புரம்
விழுப்புரம் அருகே அயினம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 70). விவசாயியான இவர் நேற்று மாலை அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு கனமழையின் காரணமாக அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை அவர் கவனிக்காமல் மிதித்து விட்டார்.இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள சின்னக்கள்ளிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு(38). விவசாயியான இவர் அதே கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்க்க சென்றபோது அங்கு மின் மோட்டாருக்கு செல்லும் வயர் பழுதடைந்துள்ளதை கவனிக்காமல் அந்த வயரில் அவரது கால் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட பிரபு, மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.