பெண் ஐ பி எஸ் அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சென்னை டி ஐ ஜி சாட்சியம்
பெண் ஐ பி எஸ் அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சென்னை காவல்துறை தலைமையிடத்து நிர்வாகப்பிரிவு டி ஐ ஜி ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதன் வழக்கு விசாரணை மீண்டும் நாளை ஒத்திவைக்கப்பட்டது
விழுப்புரம்
பாலியல் புகார்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கியது.
நேற்று இந்த வழக்கு மீண்டு்ம் விசாரணைக்கு வந்தபோது செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜரானார். சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
டி.ஐ.ஜி. சாட்சியம்
அதனை தொடர்ந்து சாட்சிகள் விசாரணை நடந்தது. அப்போது இந்த வழக்கில் 3-வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள, ஏற்கனவே திருச்சியில் டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்தவரும் தற்போது சென்னை காவல்துறை தலைமையிடத்தில் நிர்வாகப்பிரிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவருமான ஆனிவிஜயா நேரில் ஆஜரானார்.
அவர் காலை 10.30 மணியளவில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் சாட்சியம் அளிக்க தொடங்கி 11.45 மணி வரை சாட்சியம் அளித்தார். அதை நீதிபதி பதிவு செய்து கொண்டார். டி.ஐ.ஜி.யின் சாட்சியம் முடிந்த பிறகு அவரிடம் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல் வெங்கடேசன் குறுக்கு விசாரணை செய்தார்.
நாளை மீண்டும் விசாரணை
அந்த விசாரணை முடிந்த பிறகு சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ராஜாராம் குறுக்கிட்டு, டி.ஐ.ஜி. ஆனிவிஜயாவிடம் நாங்கள் குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் வழங்கும்படி கேட்டார். அதற்கு தற்போது வேண்டுமானால் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றும், கால அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதி கோபிநாதன் மறுப்பு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இவ்வழக்கில் 4, 5-வது சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் பாலமுருகன், சந்திரசேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கின் விசாரணையை நாளைக்கு(வியாழக்கிழமை) ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும் என்பதால் அவர்களுக்கு சம்மன் அனுப்பும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.