பாலாற்றில் அடித்துசெல்லப்பட்ட ராணுவவீரரை ஹெலிகாப்டர் மூலம் தேடும்பணி நடந்தது. உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

பாலாற்றில் அடித்துசெல்லப்பட்ட ராணுவவீரரை ஹெலிகாப்டர் மூலம் தேடும்பணி நடந்தது

Update: 2021-11-23 17:40 GMT
வேலூர்

பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராணுவவீரரை தேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரரை தேடும் பணி நடந்தது.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ராணுவவீரர்

வேலூரை அடுத்த வடுகந்தாங்கல் மேல்விலாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 33). லடாக்கில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி மீண்டும் லடாக் செல்வதற்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேலூர் வந்தார். பின்னர் விரிஞ்சிபுரம் பாலாற்று பாலத்தை மோட்டார்சைக்கிளில் கடக்க முயன்றார். அப்போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதுவரை அவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

தீயணைப்பு துறையினர் மற்றும் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ராணுவவீரர் மனோகரன் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலை அவரது மனைவி திவ்யா தனது 2 பெண் குழந்தைகளுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் அவரது உறவினர்கள் மற்றும் இந்துமுன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலக போர்ட்டிக்கோவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட ராணுவவீரை உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் அதிகாரிகள், சத்துவாச்சாரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நந்தகுமார் எம்.எல்.ஏ.

இதுகுறித்து தகவலறிந்த ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. மாலை 6 மணியளவில் கலெக்டர் அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், பாலாற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மனோகரனை தேடும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அவரை விரைந்து கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைவரும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றார். 

அதைத்தொடர்ந்து நந்தகுமார் எம்.எல்.ஏ., வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் ஆகியோரிடம் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராணுவவீரரை தீயணைப்புத்துறையினர் மற்றும் ட்ரோன் கேமரா மூலம் தேடி விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஹெலிகாப்டர் மூலம் தேடுதல்

இதனைத் தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்று (நேற்று) மாலை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரரை தேடும் பணி நடைபெறும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து ராணுவ வீரரின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் கூறுகையில், ராணுவ வீரரை தேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மேலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடினர். இந்த நிலையில் அவரை ஹெலிகாப்டர் மூலம் தேடுவதற்காக அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அதன்படி திருப்பதி முகாமில் இருந்து விமானப்படை கமாண்டர் சரண் தலைமையிலான குழுவினர் ஹெலிகாப்டரில் தேடும் பணியை தொடங்கியுள்ளனர். விரிஞ்சிபுரத்தில் இருந்து கல்பாக்கம் வரை தேடி வருகின்றனர் என்றார்.
பாலாற்றின் கரையோரம் ஹெலிகாப்டர் பறந்ததை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

மேலும் செய்திகள்