திண்டுக்கல் கலெக்டர் வீட்டு முன்பு மாணவ-மாணவிகள் மறியல்

திண்டுக்கல் அருகே தாளாளர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதால் தனியார் நர்சிங் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும்படி கலெக்டர் வீட்டு முன்பு மாணவ-மாணவிகள் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-23 17:34 GMT
திண்டுக்கல்: 


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக இருப்பவர் ஜோதிமுருகன். இந்த கல்லூரியில் தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாளாளர் ஜோதிமுருகன், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் கடந்த 19-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரிக்கு ‘சீல்’ 
இதையடுத்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் 3 பேர் கொடுத்த புகாரின் பேரில், ஜோதிமுருகன், விடுதி வார்டன் அர்ச்சனா ஆகியோர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் விடுதி வார்டன் அர்ச்சனா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே 20-ந் தேதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்லூரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அதோடு குழு அமைத்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பல மாணவ-மாணவிகள் விடுதியை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்றனர்.

சாலை மறியல் 
இந்த நிலையில் நேற்று தனியார் நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள கலெக்டர் வீட்டு முன்பு திரண்டனர். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசிசெல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தாளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதால் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும். தாளாளர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நிர்வாகத்தில் தலையிட கூடாது. அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை பாதுகாக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அமைக்கும் குழு மாணவ-மாணவிகள், பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குழு கருத்து கேட்கும் 
இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் கல்வியை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழுவில் இடம்பெற்ற அதிகாரிகளின் செல்போன் எண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் குழுவினர் மாணவ-மாணவிகளை சந்தித்து குறைகளை கேட்பார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்