அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்தக்கோரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திண்டுக்கல்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த நிலையில் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதன்படி திண்டுக்கல் நாகல்நகர் பணிமனை முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு கிளை உதவி செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மத்திய சங்க துணை தலைவர் மாணிக்கம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மத்திய சங்க தலைவர் ஜெயக்குமார், துணை பொதுச்செயலாளர் வெங்கிடுசாமி, கிளை செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது அரசு போக்குவரத்து கழகத்தின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்க வேண்டும். மேலும் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல் திண்டுக்கல்-நத்தம் சாலை, பழனி சாலை, நத்தம், வேடசந்தூர், பழனி ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் என மொத்தம் 6 இடங்களில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். பழனியில் கிளை தலைவர் லாசர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெ்றறது. இதனை மத்திய சங்க துணை செயலாளர் வெங்கிடுசாமி தொடங்கி வைத்தார். இதில் மத்திய சங்க துணை செயலாளர் ரூபன் அம்புரோஸ். கிளை செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.