தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்,
சுத்தமான குடிநீர் வழங்கப்படுமா?
ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் இருக்கும் குடிநீர் குழாயில், தினமும் ஏராளமான மக்கள் குடிநீர் பிடித்து செல்கின்றனர். இந்த நிலையில் உப்புநீர் கலந்தது போன்று குடிநீர் சுவை இல்லாமல் வருகிறது. இதனால் ஏதேனும் தொற்றுநோய் பரவி விடுமோ? என்ற அச்சத்துடன் மக்கள் குடிநீரை பிடித்து செல்கின்றனர். எனவே சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜா, ஆண்டிப்பட்டி.
குப்பைகளால் சுகாதாரக்கேடு
வத்தலக்குண்டு வெங்கிடாபட்டியில் தெருவுக்குள் நுழையும் இடத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவை, அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடு உருவாகும் அபாயம் உள்ளது. அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜா, வத்தலக்குண்டு.
பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு
திண்டுக்கல் அருகே உள்ள கொசவப்பட்டியில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பலர் உள்ளனர். இங்கு செல்போன் கோபுரமும் இருக்கிறது. அதேநேரம் இங்கு பி.எஸ்.என்.எல். சேவை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. அதிலும் மின்சாரம் தடை செய்யப்படும் நாட்களில் சேவை முற்றிலும் தடைபடுவதால் மக்கள் தவிக்கின்றனர். அரசு, தனியார் ஊழியர்கள், மாணவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே செல்போன் கோபுரத்துக்கான பேட்டரி, ஜெனரேட்டர்களை சரிசெய்து பி.எஸ்.என்.எல். சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - தாமஸ் அந்தோணி, கொசவப்பட்டி.
எரியாத தெருவிளக்கு
பெரியகுளம் தாலுகா வடுகபட்டி பேரூராட்சி 6-வது வார்டு குலாலர் தெருவில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். - செல்வேந்திரன், வடுகபட்டி.