நாகையில், நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 10 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற வாலிபர்

நாகையில், நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 10 பவுன் சங்கிலியை வாலிபர் திருடிச்சென்றார்.மேலும் வீடு-கடைகளில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2021-11-23 16:44 GMT
வெளிப்பாளையம்:
நாகையில், நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 10 பவுன் சங்கிலியை வாலிபர் திருடிச்சென்றார்.மேலும் வீடு-கடைகளில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
10 பவுன் சங்கிலி திருட்டு
நாகை, நாணயக்கார தெருவில் கதிரவன் (வயது55) என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். இந்த கடைக்கு நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்து செயின் வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.அப்போது நகைக்கடை உரிமையாளர் பெரியவர்கள் யாரும் வரவில்லையா? என்று கேட்டுள்ளார். 
அதற்கு அந்த வாலிபர் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை, உறவினர் வீட்டு விழாவிற்காக செயின் வாங்க வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒரு பவுன் செயின் மாடல்களை உரிமையாளர் காட்டியுள்ளார். அப்போது மோதிரம் காட்டும்படி கூறியதால், அருகில் இருந்த மோதிரங்களை எடுக்க திரும்பிய போது ரூ.4 லட்சம் மதிப்புள்ள  10 பவுன் சங்கிலியை அந்த வாலிபர் திருடி கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
போலீசில் புகார்
இதுகுறித்த புகாரின்பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள  நாணயக்கார தெருவில் 10 பவுன் சங்கிலியை வாலிபர் திருடி சென்ற சம்பவத்தால் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் சிறு நகை வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
நாகை செம்மரக்கடை வடக்கு சந்தை சேர்ந்த சந்தனசாமி மனைவி ரமணி (76). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகைகள் ஆகியவற்றை  மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
அதேபோல் நாகை சட்டையப்பர் கீழவீதியை சேர்ந்தவர் முரளி (48). இவர் அதேப்பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். இவரது மளிகை கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.30 ஆயிரத்தை கல்லாப்பெட்டியுடன் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை நகர பகுதியில் தொடரும் திருட்டுச் சம்பவங்களால் அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் அச்சமடைந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்