திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு விவசாயிகளுடன் கலந்துரையாடினர்

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த மத்திய குழுவினர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

Update: 2021-11-23 16:29 GMT
திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த மத்திய குழுவினர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

மத்திய குழுவினர் வருகை

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையினால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளை பார்வையிட உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் வேளாண்மை-கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறை இயக்குனர் விஜய்ராஜ்மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அலுவலர் ராணஞ்சாய் சிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலாளர் எம்.வி.என்.வரபிரசாத் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் நேற்று வருகை தந்தனர். 
மத்திய குழுவினருடன் வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திரரெட்டி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர் சுரேஷ் ஆகியோரும் வந்திருந்தனர். 

விவசாயிகளுடன் கலந்துரையாடல்

திருவாரூர் அருகே காவணூர் என்ற கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர் ஆகியோர் உடன் இருந்தனர். 
ஆய்வின்போது பயிர் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர், விவசாயிகளுடன் கலந்துரையாடினர். முன்னதாக பயிர்கள் பாதிப்பு தொடர்பான மனுவை மத்தியக்குழுவினரிடம் விவசாயிகள் வழங்கினர்.

சம்பா-தாளடி பயிர்கள் பாதிப்பு

இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவாரூர் மாவட்டத்தில் 54,944 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில் 2,053 எக்டேர் பரப்பளவு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 93,123 எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டதில் 6,206 எக்டேரும், 54,944 எக்டேர் பரப்பளவில் தாளடி சாகுபடி செய்யப்பட்டதில் 10,251 எக்டேர் பரப்பளவும் பாதிப்பு அடைந்துள்ளது. 
தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி கிழங்கு, வெற்றிலை, காய்கறி பயிர்கள், வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். 
 அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, உதவி கலெக்டர் பாலச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

நீடாமங்கலம்

நீடாமங்கலம் பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்து, சேத விவரங்களை கேட்டறிந்தனர். 
அப்போது மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்