மெழுகுவர்த்தி வாங்கி தராத ஆத்திரத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்

மெழுகுவர்த்தி வாங்கி தராத ஆத்திரத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-23 15:38 GMT
மின்சாரம் தடைபட்டது

திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கிராமம், துலுக்கானதம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கு மகேஸ்வரி (46) என்ற மனைவியும், பாண்டியன் (28) என்ற மகனும் உள்ளனர். பாண்டியன் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகனை பெற்றோர் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் இதுநாள் வரையிலும் அவர் குணமாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டியன் தனது தாயார் மகேஸ்வரியை ஆத்திரத்தில் உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தன் னுடைய மகனை பிரிந்து சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டார். பாலகிருஷ்ணன் மட்டும் பாண்டியனுடன் தங்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு மின்சாரம் தடைபட்டது.

அடித்துக்கொலை

அப்போது பாண்டியன் தனது தந்தையிடம் தனக்கு மெழுகுவர்த்தி வாங்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் காலையில் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அப்போது தந்தை, மகனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தன்னுடைய தந்தை பாலகிருஷ்ணனை தலையில் சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மணவாள நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

பாலகிருஷ்ணனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருவள்ளூர் அருகே மெழுகுவர்த்தி வாங்கி தராத ஆத்திரத்தில் தந்தையை மகன் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் வெங்கத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்