மனோஜ் ஜாமீனுக்கான சொத்து ஆவணங்கள் கோர்ட்டில் ஏற்பு
மனோஜ் ஜாமீனுக்கான சொத்து ஆவணங்கள் கோர்ட்டில் ஏற்பு
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மனோஜூக்கு ஜாமீனுக்கான சொத்து ஆவணங்கள் ஊட்டி கோர்ட்டில் ஏற்கப்பட்டது. அத்துடன் அவர் ஊட்டியில் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மனோஜிக்கு ஜாமீன்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதில் மனோஜை தவிர மற்ற 9 பேரும் ஜாமீனில் உள்ளனர்.
கடந்த 16.07.2021-ந் தேதி ஊட்டி கோர்ட்டு மனோஜூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி 2 நபர்கள் பிணை தர வேண்டும். அந்த 2 பேரும் கோவை அல்லது நீலகிரி மாவட்டத்தில் குடியிருக்க வேண்டும். ரூ.50,000 சொத்துக்கான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
சொத்து ஆவணங்கள் ஏற்பு
மனோஜ் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஜாமீன் தர நபர்கள் இல்லை. இதனால் மனோஜ் தரப்பு வக்கீல் முனிரத்னம் ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மீண்டும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜின் ரத்த உறவினர்கள் பிணை தரலாம் என்று நிபந்தனையில் தளர்வு அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் ஊட்டி கோர்ட்டில் மனோஜின் மனைவி மற்றும் ஒருவர் ஆஜராகினர்.
ஊட்டியில் தங்க உத்தரவு
மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் மனோஜூக்கு பிணை தருவதற்காக ரூ.50 ஆயிரத்துக்கு சொத்து ஆவணங்களை தாக்கல் செய்தனர். இந்த ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து நீதிபதி, மனோஜ் ஊட்டியில் தங்கி இருக்க வேண்டும். வாரந்தோறும் திங்கட்கிழமை ஊட்டி கோர்ட்டில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கோர்ட்டில் பெறப்பட்ட பிணை ஆவணம் குன்னூர் கிளை சிறைக்கு அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் மனோஜ் இன்று (புதன்கிழமை) ஜாமீனில் வெளியே வர உள்ளார்.