தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25½ லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி நிருபர் கைது செய்யப்பட்டார்

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25½ லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி நிருபர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-11-23 14:02 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25½ லட்சம் மோசடி செய்த போலி நிருபர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அரசு வேலை
தூத்துக்குடி முனியசாமிபுரம் சுடலை காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் மாரி சசிகுமார் (வயது 35). இவர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ்குமார் (36) என்பவர் அறிமுகமாகி உள்ளார். 
இவர், தான் சென்னையில் பத்திரிக்கை ஒன்றில் நிருபராக இருப்பதாகவும், அங்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பதாகவும், தன்னால் அரசு வேலை வாங்கி கொடுக்க முடியும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.
ரூ.25½ லட்சம் மோசடி
இதனை நம்பிய மாரிசசிகுமார் தனக்கும், தனது மனைவி, சகோதரி மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருமாறு கூறி உள்ளார். இதற்காக மாரி சசிகுமாரிடம் இருந்து ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை ரமேஷ்குமார் வாங்கி உள்ளார். ஆனால், அவர் எந்தவித அரசு வேலையும் வாங்கி கொடுக்கவில்லை.
எனவே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாரிசசிக்குமார் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தார்.
கைது
அதன்பேரில், புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வனிதாராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஊர்க்காவலபெருமாள், சண்முகசுந்தரம், பிள்ளை முத்து மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,  போலி நிருபரான ரமேஷ்குமார் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரமேஷ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரமேஷ்குமார் மீது விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், 2 திருட்டு வழக்குகளும், சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் ஆக மொத்தம் 6 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்