ஆதம்பாக்கத்தில் காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசார பயணம்
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வால் மக்கள் தவியாய் தவிக்கிறார்கள். மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் 22-ந் தேதி(நேற்று) முதல் 29-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார்.
அதன்படி சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான நாஞ்சில் பிரசாத் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பிரசார பயணத்தை தொடங்கி வைத்தனர்.
ஆதம்பாக்கம் நியூ காலனி ஏரிக்கரை தெருவில் இருந்து தொடங்கிய பிரசார பயணம், முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலை சென்றடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.