200 முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு
200 முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு
சேலம், நவ.23-
சேலத்தில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் வருகிற 26-ந் தேதி சேலம் சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடக்கும் இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் லதா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்ததாவது:-
200 தொழில் நிறுவனங்கள்
சேலம் சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவன காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
மேலும், அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளது.
முககவசம் கட்டாயம்
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பொறியியல், ஓட்டல் மேனேஜ்ெமன்ட் மற்றும் ஆசிரியர் கல்வி தகுதிகள் உள்ளிட்ட கல்வி தகுதிகள் கொண்ட நபர்கள் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகை தருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (பயோ டேட்டா) ஆகியவற்றை நேரில் கொண்டு வர வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகைதரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.