ஓசூரில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கட்டிட தொழிலாளி மதுபாட்டிலால் குத்திக்கொலை மேஸ்திரி உள்பட 2 பேர் கைது

ஓசூரில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கட்டிட தொழிலாளி, மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-23 06:08 GMT
ஓசூர்:
ஓசூரில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கட்டிட தொழிலாளி, மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கள்ளத்தொடர்பு 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோகுல் நகர் அருகே நாளபெட்டா அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது56). இவருடைய 2-வது மனைவி காவேரி, இவர் கட்டிட சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். காவேரிக்கும், ஓசூர் வெங்கடேஷ் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (32) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சதீஷ், கட்டிட தொழிலாளி மற்றும் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
இவர்களது கள்ளத்தொடர்பை அறிந்த லட்சுமணன், மனைவி மற்றும் சதீசை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது. இதனால் லட்சுமணன், சதீசை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு, லட்சுமணன் மற்றும் அவரது நண்பர் மகேந்திரன் ஆகியோர் சதீசை மது அருந்த நாளபெட்டா அக்ரஹாரம் பகுதிக்கு வரவழைத்தனர்.
குத்திக்கொலை
பின்னர், அங்கு அவர்கள் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது லட்சுமணன், சதீஷிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, மதுபாட்டிலை உடைத்து சதீசின் கழுத்தில் 2 பேரும் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள், ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று லட்சுமணன், மகேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முனுசாமி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேருமு் ஓசூர் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கட்டிட தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்