ஜேடர்பாளையம் அருகே சுகாதார வளாகம் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ஜேடர்பாளையம் அருகே சுகாதார வளாகம் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

Update: 2021-11-23 05:02 GMT
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றி சுகாதார வளாகம் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு
ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளாபாளையம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததின்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஏற்பாட்டில் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
ஆனால் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பொது சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளாபாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகம், வருவாய் மற்றும் வட்டார வளர்ச்சித்துறைக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜேடர்பாளையத்தில் இருந்து சோழசிராமணி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவாய்த்துறையினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். 
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1½மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்