அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை
அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆனது.
அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆனது.
தக்காளி கிலோ ரூ.150
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து விட்டது. தக்காளி ஒரு பெட்டி ரூ.1000-க்கும், ஒரு கிலோ ரூ.110 முதல் ரூ.140 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதன்படி அந்தியூரில் நேற்று கூடிய வாரச்சந்தையில் தக்காளி கிலோ ஒன்று ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்தனர். எனினும் சமையலுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பதால் பெண்கள் குறைந்த அளவு தக்காளியை வாங்கி சென்றனர்.
காய்கறி செடிகள் சேதம்
இதுதவிர அந்தியூர் வாரச்சந்தையில் கத்தரிக்காய் ரூ.120 முதல் ரூ.140 வரையும், சிறிய வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 ரூ..60 வரையும் விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, ‘தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி செடிகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து விட்டன. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதனால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை ஆனது’ என்றனர்.