போலீஸ் நிலையம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு
போலீஸ் நிலையம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:
புகார் அளிக்க வந்தனர்
அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையத்திற்கு, நடிகர் சூர்யாவை கண்டித்து, வன்னியர்களை அவதூறாக ஜெய்பீம் திரைப்படத்தில் சித்தரித்துக் காட்டியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை தலைமையில் நேற்று புகார் கொடுக்க வந்தனர்.
அப்போது அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் எந்த ஒரு தகவலும் இல்லாமல் ஏன் கூட்டமாக வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது பா.ம.க.வினர் நேற்று முன்தினமே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர். அதற்கு அவர் தகவல் தெரியாது என்று கூறியதாக தெரிகிறது.
ஆர்ப்பாட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர் போலீஸ் நிலையம் முன்பு சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்னியர்களையும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவையும் இழிவாக ஜெய்பீம் திரைப்படத்தில் உள்நோக்கத்துடன் காட்சிகளை அமைத்ததாக கூறி, நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் பட தயாரிப்பாளரை கைது செய்ய வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை சமரசம் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களிடமிருந்து புகார் மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பா.ம.க.வினர் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.