வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்
கன்னியாகுமரி கடற்கரையில் சீசன் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கடற்கரையில் சீசன் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீசன் கடைகளுக்கு...
புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் சீசன் நாட்களாக கருதப்படுகிறது. சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் மண்டல பூஜை முதல் மகர விளக்கு வரை உள்ள 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
இதனையொட்டி கன்னியாகுமரியில் சீசன் கடைகள் திறக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில் தேவசம் போர்டுக்கு சொந்தமான கன்னியாகுமரி கடற்கரையில் நடைபாதையில் 48 கடைகளுக்காக அளவீடு போடப்பட்டது.
வியாபாரிகள் எதிர்ப்பு
இதற்கு கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதனை கண்டித்து நேற்று 350-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் தங்களுடைய எதிர்ப்பை காட்டினர்.
இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. நடைபாதைகளில் தற்காலிக சீசன் கடைகள் அமைக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என கூறி வியாபாரிகள் கடைகளை அடைந்திருந்தனர்.
சுற்றுலா பயணிகள் அவதி
மேலும் இதுதொடர்பாக அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பி தங்கம் கூறுகையில், கடற்கரையில் நடைபாதை கடைகள் அமைப்பதினால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருப்பது மட்டுமல்லாமல் அவர்கள் கடற்கரையில் அமர்ந்து கடலின் அழகை ரசிக்க முடியாதவாறு கடைகள் இருக்கும். எனவே அங்கு கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது.
இதுதொடர்பாக ஏற்கனவே மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டிருந்ததின் பேரில் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்தநிலையில் மீண்டும் கடைகளை திறக்க தற்போது தேவசம்போர்டு ஏற்பாடு செய்வது கண்டனம் தெரிவித்து ஒருநாள் கடை அடைப்பை நடத்தி உள்ளோம் என்றார். நாள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.