காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கும்பல்

மேலூர் அருகே 2 காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-22 20:13 GMT
மேலூர்,

மேலூர் அருகே 2 காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற  கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

காவலாளிகளை கட்டி போட்டனர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் ஊருக்கு வெளியே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 2 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு 6 பேர் வந்தனர். அவர்கள் டாஸ்மாக் கடை முன்பு படுத்திருந்த காவலாளிகள் பொன்னையா(வயது 40), ெபான்னமராவதி(44) ஆகிய 2 பேரையும் கத்தி முனையில் மிரட்டி கயிற்றால் கட்டினர்.
பின்னர் தாங்கள் கொண்டு வந்த வெல்டிங் எந்திரத்தால் கடையின் இரும்பு கதவை உடைக்க திட்டமிட்டனர். கடையில் இருந்து மின்சாரம் எடுக்க முடியாததால் இரும்பு கதவை உடைக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆயுதத்தால் இரும்பு கதவின் பூட்டை உடைக்க முயன்றனர். அவர்களால் பூட்டை உடைக்க முடியவில்லை.
அப்போது அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆட்கள் நடமாட்டம் காணப்பட்டது. அந்த சத்தம் கேட்டு அந்த 6 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பினர்.
பின்னர் விவசாயிகள் அங்கு வந்து, டாஸ்மாக் கடை காவலாளிகள் கயிற்றால் கட்டப்பட்டு கிடந்ததை பார்த்து அவிழ்த்து விட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இது குறித்து மேலவளவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை முயற்சி குறித்து காவலாளிகளிடம் விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடைபெற்றது.
பணம் தப்பியது
இதே டாஸ்மாக் கடையில் ஏற்கனவே கடந்த ஆண்டு வெல்டிங் எந்திரம் மூலம் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது கடையின் வெளியே சுவிட்ச் பாக்ஸ் இருந்தது. 
அதன்பிறகு அதனை எடுத்து விட்டதால் தற்போது டாஸ்மாக் கடையை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து ேமலவளவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்