தேவூர், நவ.23-
சரபங்காநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
சரபங்காநதி
ஏற்காடு சேர்வராயன் மலை பகுதியில் உற்பத்தியாகி வரும் சரபங்காநதியானது, ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, எடப்பாடி, தேவூர் சரபங்காநதி தடுப்பணை வழியாக அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. தற்போது ஏற்காடு மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் சரங்காநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் தேவூர் பகுதியில் அரசிராமணி, குஞ்சாம்பாளையம், ஆனகுண்ட பாறை, ஆத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல்வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. குள்ளம்பட்டி ஆத்துக்காடு தரை பாலம், செட்டிபட்டி ஓங்காளியம்மன் கோவில் தரை பாலம் முழுவதும் தண்ணீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
பொதுமக்கள் அவதி
வெள்ளக்காடக சென்றதால் தரை பாலம் வழியாக கடந்து செல்லும் மலங்காடு, மலைமாரியம்மன் கோவில், வெள்ளூற்று பெருமாள் கோவில், ஓலப்பாளையம், கல்லம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்,
இதேபோல் தேவூர் சரபங்காநதி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து சென்றதால் தடுப்பணை வழியாக செல்லும் மயிலம்பட்டி, மேட்டுக்கடை, பெரமாச்சிபாளையம், சென்றாயனூர், சோழக்கவுண்டனூர் உள்ளிட்ட கிராம மக்களும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
அணைமேடு நீர்வீழ்ச்சி
சரபங்கா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அணைமேடு கலுங்கு பகுதியில் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் அருவி போல் கொட்டிவருகிறது. இதனை இந்த பகுதி மக்கள் அணைமேடு நீர்வீழ்ச்சி என்று அழைக்கின்றனர். இதுதவிர குடும்பம், குடும்பமாக இந்த அருவிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கு குளிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். குளிக்கும் போது சிலர் வழுக்கி விழுகின்றனர்.
எனவே பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வீழ்ச்சி பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.