ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி

Update: 2021-11-22 20:03 GMT
சேலம், நவ.23-
நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயற்சி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள உலிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியாயி (வயது 60). இவரது மூத்த மகன் குமார் (37). டிரைவரான இவருக்கு தர்னிஷ் (9) என்ற மகனும், நர்ஷினி (8) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு அவர்களின் உடலில் தண்ணீரை ஊற்றினர். அப்போது, தங்களது வீட்டிற்கு செல்ல முடியாத வகையில் பொது வழிப்பாதையை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாரியாயி மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் ஆட்டோவில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து மாரியாயி மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கூறியதாவது:-
நடைபாதை ஆக்கிரமிப்பு
கடந்த 2005-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் நாங்கள் 2.72 ஏக்கர் நிலத்தை ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கினோம். தற்போது நாங்கள் அங்கு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். வீட்டிற்கு சென்று வருவதற்கு பொது வழிப்பாதை இருந்தது. அதை பயன்படுத்தி வந்தோம். 
ஆனால் தற்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் அந்த பாதையை ஆக்கிரமித்து கல்லை வைத்து அடைத்துவிட்டனர். இதனால் அவசர தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டால் சாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகள் செல்ல முடியவில்லை. 
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது தொடர்பாக கெங்கவல்லி போலீஸ் நிலையத்திலும், தாசில்தாரிடமும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனவேதனையுடன் நாங்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றோம். நடைபாதையை ஆக்கிரமித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்