24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட விஸ்வநத்தம் கிராமத்தில் இனி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அசோகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2021-11-22 19:54 GMT
சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட விஸ்வநத்தம் கிராமத்தில் இனி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அசோகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
விஸ்வநத்தம்
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் விஸ்வநத்தம் பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளை தமிழக அரசு சிவகாசி மாநகராட்சியுடன் இணைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் விஸ்வநத்தம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் இந்த பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்வதில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாகவும், அதை சரி செய்து கொடுத்து தடை இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அசோகன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். 
 இதை தொடர்ந்து அவர் அமைச்சர் தங்கம் தென்னரசு கவனத்துக்கு இப்பிரச்சினையை கொண்டு சென்று விஸ்வநத்தம் பகுதியில் தடை இல்லாத மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய கோரினர். இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, செந்தில்பாலாஜி ஆகியோரின் நடவடிக்கையால் விஸ்வநத்தம் பகுதிக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மின்சாரம் வினியோகம் 
இதுகுறித்து அசோகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- சிவகாசி பகுதியில் மட்டும் பல்வேறு பிரிவுகளில் 9,635 பேர் மின் இணைப்பு பெற்றுள்ளனர். சிவகாசி பகுதியில் தட்டுப்பாடு இல்லாத மின்சாரம் வினியோகம் நடக்கிறது. சிவகாசி நகர பகுதியை தவிர்த்து அதை யொட்டி உள்ள கிராமப்பகுதிகளில் மும்முனை மின்சாரம் வேண்டும் என பொதுமக்கள் கோரினர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இனி அப்பகுதியில் மின்சார தட்டுபாடு இருக்காது. 
அடுத்து வரும் நாட்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மற்ற பஞ்சாயத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மாநகராட்சி எல்லைக்குள் வரும் பகுதிகளில் 15 மீட்டர் தூரத்துக்கு ஒரு மின்விளக்கு அமைக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது மின்வாரிய அதிகாரிகள் முரளிதரன், முத்துராஜ், தி.மு.க. நகர பொறுப்பாளர் காளிராஜ், காங்கிரஸ் பிரமுகர்கள் சேர்மத்துரை, சசிநகர் முருகேசன், கணேசன், சபாபதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்