கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 4 கிராமங்கள் துண்டிப்பு
கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 4 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இங்குள்ளவர்களுக்கு ரப்பர் படகு மூலம் மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.;
குடியாத்தம்
கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 4 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இங்குள்ளவர்களுக்கு ரப்பர் படகு மூலம் மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
4 கிராமங்கள் துண்டிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி, சித்தாத்தூர், ஆலாம்பட்டரை, ஏழரை தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் வீடுகளில் 4,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் வேறு பகுதிகளுக்கு செல்ல குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் அருகே கவுண்டன்ய மகாநதி ஆற்றை தாண்டியும், மறுபக்கம் வெட்டுவானத்தில் பாலாற்றை தாண்டியும், குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் 32 கண் ெரயில்வே மேம்பாலம் வழியாகவும் செல்வார்கள்.
குடியாத்தம் வழியாகச் செல்லும் கவுண்டன்யமகாநதி ஆற்றுவெள்ளம் குடியாத்தத்தை அடுத்த இந்திராநகர் பகுதியில் இரண்டாக பிரிந்து ஆலாம்பட்டரை, பட்டு கிராமம் வழியாக பாலாற்றில் கலக்கிறது. அதேபோல் வேப்பூர் பகுதியிலும் வெட்டுவானம் பகுதியிலும் பாலாறு வெள்ளம் செல்வதால் ஒலக்காசி, சித்தாத்தூர், ஆலாம்பட்டரை, ஏழரை தோப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமலும், மற்ற பகுதியில் இருந்த அந்த கிராமத்திற்கு செல்ல முடியாமலும் கடந்த 4 நாட்களாக தவித்து வருகின்றனர்.
உணவு பொட்டலங்கள்
இந்த 4 கிராமங்களிலும் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. இந்த கவுண்டன்ய மகாநதி வெள்ளத்தால் நத்தமேடு மற்றும் ஆலாம்பட்டரை பகுதியில் உள்ள சிறு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நான்கு கிராம மக்களும் தனி தீவு போல் ஆகிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொண்டு நிறுவனங்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உணவு பொட்டலங்களை கயிறு கட்டி அதன் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஒலக்காசி, சித்தாத்தூர், ஆலாம்பட்டரை, ஏழரைதோப்பு பகுதியில் உள்ள பொதுமக்களின் வசதிக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இன்ஸ்பெக்டர் பி.கே.பியாசி தலைமையில் 20 பேர் நத்தமேடு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா, ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நத்தம்பிரதீஷ், நகர தி.மு.க. பொறுப்பாளர் சவுந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நத்தமேடு பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகு மூலம் காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவற்றையும், நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
ரப்பர் படகு மூலம்
மேலும் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மேல்ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகாதார ராஜ்குமார், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் அரிகிருஷ்ணன் ஆகியோர் ரப்பர் படகு மூலம் அப்பகுதிக்குச் சென்று அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினர். நத்தமேடு-ஆலாம்பட்டரை கூட்ரோடு பகுதியில் பனைமர கட்டைகளை வைத்து மணல் மூட்டைகள் கொண்டு தற்காலிக பாலம் அமைக்க அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.