தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
குரங்குகளால் தொல்லை
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட கோட்டியால் பாண்டிபஜார் பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை எடுத்துச்சென்றுவிடுகின்றன. மேலும் குழந்தைகளை கடிக்க வருவதுடன், கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பெண்களிடம் இருந்து பைகளை பறித்து சென்றுவிடுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கோட்டியால் பாண்டிபஜார், அரியலூர்.
தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
பெரம்பலூர் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதில் 7-வது வார்டான ரோஸ் நகர், தென்றல் நகர் மட்டுமல்லாது, அதனருகே பாதாள சாக்கடை இல்லாத புதிய மதனகோபாலபுரம் பகுதியில் உள்ள தெருக்களிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த தெருக்களில் உள்ள சிறுவர்கள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் அந்த கழிவுநீரில் இருந்து விஷ ஜந்துக்கள் சுற்றி திரிகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும். மேலும் புதிய மதனகோபாலபுரம் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புதிய மதனகோபாலபுரம், பெரம்பலூர்.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
அரியலூர் பூக்கார தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை அப்பகுதி மக்கள் சாலையோரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதே நிலை நீடித்தால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பூக்காரத்தெரு, அரியலூர்.
பழுதடைந்த பெயர் பலகை சரிசெய்யப்படுமா?
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் ஹாஜி வாப்பு நினைவு அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் நுழைவு வாயிலில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகை பழுதடைந்து எழுத்துகள் தெரியாத வண்ணம் உள்ளதால் தெரியாதவர்கள் மருத்துவமனைக்கு வரும் போது தடுமாறுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மணிவேல், பள்ளப்பட்டி, கரூர்.
ஆபத்தான மின்மாற்றி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி ரைஸ்மில் பஸ் நிறுத்தம் குளத்தின் அருகில் மின்மாற்றி ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மின்மாற்றியின் இணைப்பு கம்பிகள் குளத்திற்குள் உள்ளது. இதனால் குளத்தில் மின்சாரம் பாயும் ஆபத்து உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த குளத்தில் குளித்து வருகின்றனர். ஆகவே பாதுகாப்பான முறையில் மின்மாற்றி அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மேட்டுப்பட்டி, புதுக்கோட்டை.
தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியில் உள்ள வீதிகளில் ஆங்காங்கே தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக கடைகளுக்கு செல்லும் பொதுமக்களையும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களையும் தினந்தோறும் கடித்து வரும் சம்பவம் நடந்து வருகிறது. எனவே தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை.
ஊரணியில் கலக்கும் குப்பைகள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் ஆவூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாமி ஊரணி குடிதண்ணீர் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் தான் இங்கு உள்ள மக்கள் அனைவரும் குடிதண்ணீர் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பக்கத்து ஊர்களிலும் இந்த தண்ணீரை எடுத்து சென்று பயன்படுத்தி வருகின்றனர். இந்த மழை காலத்தில் ஊரணியின் அருகில் குப்பை, ஆடு, மாட்டு சாணத்தை குப்பை குழி அமைத்து அருகில் கொட்டுகிறார்கள். இவை குடிநீரில் கலப்பதினால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இன்னாசிமுத்து, ஆவூர், புதுக்கோட்டை.
உடைந்த இருக்கைகள்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், எம்.களத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மேய்க்கல் நாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள பயணியர் நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் உடைக்கப்பட்டு சேதம் அடைந்து கிடக்கிறது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் கால்கடுக்க நின்று பஸ் ஏறி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பயணிகள் நிழற்குடையில் சிலர் மது அருந்துவதினால் வயதானவர்கள், பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மேய்க்கல் நாயக்கன்பட்டி, திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நாச்சிகுறிச்சி பஞ்சாயத்து இணியனூர் கிராமத்தில் சாலையோரம் குப்பைகள், மருத்துவக்கழிவுகள், மின்சாதன கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் இந்த குப்பைகளை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இணியனூர், திருச்சி.
குண்டும், குழியுமான சாலைகள்
திருச்சி மாநகராட்சி 39-வது வார்டு சீனிவாச நகர் பகுதியில் முறையான தார் சாலை வசதி இல்லாததால் மழைபெய்யும் போது மண்சாலை சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சீனிவாச நகர், திருச்சி.
இதேபோல் திருச்சி உறையூர் களத்து மேடு அருகில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கணேசன், உறையூர், திருச்சி.
இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதி 35-வது வார்டு ஏர்போர்ட் ஜேகே நகர், ரோஜா தெரு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் சேறும் சகதியுமாக உள்ளது. இங்கு தேங்கி நிற்கும் தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மணிகண்டன், ஜேகே நகர், திருச்சி.
பஸ் இயக்க நேரம் மாற்றத்தால் மாணவர்கள் அவதி
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் ஆதனூர் ஊராட்சி தவிட்டுப்பட்டி, ஆதனூர், கீரிப்பட்டி, கட்டணாம்பட்டி, நல்லியம்பட்டி, பொன்னம்பலம்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு துறையூரிலிருந்து தினமும் காலை 8.30க்கு அரசு பஸ் வரும். தற்போது இந்த கொரோனா காலத்திற்கு பிறகு 8.30 மணிக்கு வரவேண்டிய அரசு பஸ் 9.30 மணிக்கு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிக்கு நேரத்தில் செல்லவேண்டும் என்பதற்காக இப்பகுதி மாணவ-மாணவிகள் சுமார் 3 கிலோமீட்டருக்கு சைக்கிளிலும், நடந்தும் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கெள்கிறோம்.
மாணவர்கள், தவிட்டுப்பட்டி, திருச்சி.
பள்ளியை சூழ்ந்த மழைநீர்
திருச்சி இனாமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வடிகால் வசதி இல்லாததால் தற்போது பெய்த மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி பள்ளியை சுற்றி குளம்போல் தேங்கி நிற்கின்றன. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளும், அவர்களை அழைத்து வரும் பெற்றோர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி கட்டிடத்தை ஒட்டி மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்பதினால் கட்டிடத்தின் வலு செயலிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இனாமத்தூர், திருச்சி.
நாய்களால் பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், 40-வது வார்டு பிராட்டியூர் பகுதியில் நடுத்தெருவில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்பவர்களை கடிக்க வருகின்றன. மேலும் நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பிராட்டியூர், திருச்சி.