வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக பாலாறு, கிளை ஆறுகள், ஏரிகள் நிரம்பியது. மேலும் வாணியம்பாடி நகர பகுதிகளில் உள்ள கால்வாய்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதால், கனமழை காரணமாக கால்வாய்களில் செல்ல வேண்டிய தண்ணீர் அனைத்தும் வணிக நிறுவனங்கள், குடியிருப்பு, மருத்துவமனை, பள்ளி பகுதிகளை சூழ்ந்துள்ளது.
உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வணிகர் சங்கத்தினர், நேற்று வணிகர் சங்க மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகிலிருந்து சி.எல்.சாலை, பஸ் நிலையம் வழியாக நகராட்சிக்கு ஊர்வலமாக சென்று நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி தாமோதரன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்துள்ளனர்.