பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பொது வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
விழுப்புரம்
முற்றுகை
விக்கிரவாண்டி தாலுகா முட்ராம்பட்டு பழைய காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென அவர்கள் அனைவரும் அங்குள்ள அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
அப்போது பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சிலரை கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமையில் பொதுமக்கள் சிலர், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வழிப்பாதை ஆக்கிரமிப்பு
முட்ராம்பட்டு பழைய காலனி பகுதியில் நாங்கள் எங்கள் முன்னோர்களில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்கள் 23 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை அதே கிராமத்தை சேர்ந்த 4 பேர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு நாங்கள் நடந்து செல்ல வழிவிடாமல் பிரச்சினை செய்து வருகின்றனர். நாங்கள் பொது வழிப்பாதையின்றி மிகவும் கஷ்டமான சூழலில் வசித்து வருகிறோம்.
எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு மாவட்ட அளவையரை கொண்ட குழு அமைத்து எங்கள் பகுதியில் உள்ள அனைத்து பட்டா நகல்களையும் பெற்று ஆய்வு செய்து அவரவர்களுக்கு உரிய இடத்தை அளந்து அதற்கேற்றாற்போல் பட்டா மாற்றம் செய்தும், எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.