அன்னவாசல் அருகே இருதரப்பினர் மோதல்; சாலை மறியல் 6 பேர் கைது
அன்னவாசலில் இரு தரப்பினரிடைேய ஏற்பட்ட மோதலையடுத்து ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இருதரப்பை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னவாசல்:
மோதல்
அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் மணிகண்டன் (வயது 21). இவர் நேற்று முன்தினம் அன்னவாசல் பெரிய குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த செங்கப்பட்டியை சேர்ந்த முருகையா (33) ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மணிகண்டனுக்கு ஆதரவாக நாகராஜ், ஆறுமுகம், தாஸ், பாவேந்தன் ஆகியோர் ஒன்று சேர்ந்து முருகையாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் முருகையாவுக்கு ஆதரவாக யோகேஸ்வரன், சூர்யா ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் இருவரும் காயமடைந்த நிலையில் முருகையா புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டன் சிறு காயங்களுடன் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சாலை மறியல்
இரு தரப்பினரும் இது தொடர்பாக அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முருகையா தரப்பினர் உடனடியாக மணிகண்டன் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விராலிமலை-புதுக்கோட்டை சாலையில் செங்கப்பட்டி என்னுமிடத்தில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெஜினாபேகம், துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
பரபரப்பு
இதனையடுத்து இரு தரப்பு புகார் மீது வழக்குப்பதிவு செய்த அன்னவாசல் போலீசார் முருகையா அளித்த புகாரின் பேரில், நாகராஜ், ஆறுமுகம், தாஸ், பாவேந்தன் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் மணிகண்டன் அளித்த புகாரைத் தொடர்ந்து யோகேஸ்வரன், சூர்யா ஆகியோரை கைது செய்து இலுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருமயம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.