கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானார்.
தொண்டி,
தொண்டி அருகே உள்ள நம்புதாளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (வயது 45). காளி (43). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் பைபர் படகு ஒன்றில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடலில் பலத்த காற்று வீசியதில் இவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்துள்ளது. இதில் இருவரும் கடலில் தத்தளித்து உள்ளனர். இதனைக் கண்ட அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 2 பேரையும் மீட்டனர். ஆனால் இதில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். காளி என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப் பட்டார். தொடர்ந்து இருவரையும் நம்புதாளை கடற் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உயிரிழந்த ஆறுமுகத் தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், நம்புதாளை கிராம நிர்வாக அலுவலர் நம்பு ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த ஆறுமுகத்திற்கு வள்ளி மயில் என்ற மனைவியும் மனோஜ்குமார் என்ற மகனும் உள்ளனர். கடலில் கவிழ்ந்த படகை நம்புதாளை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.