செல்போனில் ஆன்லைனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை
செல்போனில் ஆன்லைனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதுகுளத்தூர்,
செல்போனில் ஆன்லைனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ்-2 மாணவன்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நாடார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி ஹேமா, மகன் அஜய் (வயது 16).
முதுகுளத்தூரில் ஒரு பள்ளியில் அஜய் 12-ம் வகுப்பு படித்து வந்தார். வேல்முருகன் குஜராத்தில் கூலி வேலை செய்து வருகிறார். தாய் ஹேமா அரிசி மாவு விற்பனை செய்து வருகிறார்.
இந்தநிலையில் அஜய் செல்போனில் ஆன்லைன் விளையாட்டு மீது மோகம் கொண்டு அடிக்கடி விளையாடி வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்து செல்போனை வாங்கி வைத்துக்கொண்டாராம். இதில் மனவருத்தம் அடைந்த மாணவன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோகம்
தகவல் அறிந்ததும் முதுகுளத்தூர் போலீசார் விரைந்து வந்து மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆன்லைனில் விளையாட முடியாத விரக்தியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.