தொழிலாளி மர்ம சாவு வழக்கில் ‘திடீர்’ திருப்பம்:குடும்ப தகராறில் மகனே தந்தையை அடித்துக்கொன்றது அம்பலம் பொறையாறில் பரபரப்பு

பொறையாறில், தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் குடும்ப தகராறில் அவரை மகனே அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது.

Update: 2021-11-22 16:31 GMT
பொறையாறு:-

பொறையாறில், தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் குடும்ப தகராறில் அவரை மகனே அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது. 

விவசாய தொழிலாளி மர்ம சாவு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மரகதம் காலனியை சேர்ந்தவர் பாலு(வயது 65). விவசாய தொழிலாளி. இவர் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொறையாறு கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், 4 மகள்கள், 2 மகன்களும் உள்ளனர். இவருடைய 4-வது மகன் காளிமுத்து(21), சென்னையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.
பாலு தினமும் மது குடித்து விட்டு வந்து தெரு மக்களிடமும், குடும்பத்தினரிடமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 16-ந் தேதி 4-வது மகன் காளிமுத்து சென்னையில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலு தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் வீட்டில் பிணமாக கிடந்தார். 

குடும்ப பிரச்சினை

இதை அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், மகாலட்சுமி மற்றும் போலீசார் அங்கு சென்று பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 
விசாரணையின் தொடக்கத்தில் பாலு போதையில் கிரைண்டரின் மேல் விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக அவருடைய குடும்பத்தினர், போலீசாரிடம் கூறினர். ஆனால் அவருடைய சாவில் சந்தேகம் இருந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக காளிமுத்து தனது தந்தை பாலுவின் காலை கடப்பாரையால் அடித்ததாக தெரிய வந்தது. 

விசாரணை தீவிரம்

இதனிடையே சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பாலுவின் மகன் காளிமுத்து மற்றும் குடும்பத்தினரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். 
இதில் திடீர் திருப்பமாக குடும்ப தகராறில் பாலுவை, அவருடைய மகனே அடித்துக்கொன்றது தெரிய வந்தது. நேற்று முன்தினம் பாலு தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரம் அடைந்த காளிமுத்து வீட்டில் இருந்த மூங்கில் கட்டையால் பாலுவின் தலையில் அடித்ததும், இதில் பாலு ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. 

கைது

இதைத்தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி காளிமுத்துவை கைது செய்து செய்தனர். 
குடும்ப தகராறில் தந்தையை, மகனே அடித்துகொன்ற சம்பவம் பொறையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்