குளத்தூர் ஏரி வாய்க்கால் கரையில் உடைப்பு
குளத்தூர் ஏரி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் 700 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தது.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் பகுதியில் பெய்த கன மழையால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. இதில் குளத்தூர் ஏரியும் நிரம்பி வழிந்தது. ஏரிக்கு தொடர்ந்து அதிகளவு தண்ணீர் வந்ததால், உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
ஆனால் உபரிநீர் செல்லக்கூடிய வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்ததால் தண்ணீர் வழிந்து ஓடவில்லை. இதனால் கரையில் உடைப்பு ஏற்பட்டு, அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் 700 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்களை தண்ணீர் மூழ்கடித்துள்ளது. உடனடியாக வாய்க்கால் கரை உடைப்பை சரிசெய்ய வேண்டும் எனவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.