கோவை
தக்காளி விலை கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமையலில் தக்காளி
வீட்டில் தயாரிக்கப்படும் உணவுக்கு விதவிதமான குழம்பு வைத்தால் ருசி குடும்பத்தினரை அசத்தும். ஆனால் அந்த குழம்பு செய்வதற்கு தக்காளி மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. இதனால் என்ன குழம்பு வைக்கலாம் என்று பெண்கள் மிகவும் குழப்பம் அடைகின்றனர்.
பல வீடுகளில் தோசை, இட்லிக்கு தக்காளி சட்டினி வைப்பதை தற்காலிகமாக நிறுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கோவையில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் விற்பனை நடைபெறுகிறது. தற்போது மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ஆர்.எஸ். புரம் உழவர் சந்தையில் கடந்த 12-ந் தேதி ரூ.70-க்கு விற்ற தக்காளி, 14-ந் தேதி ரூ.48-க்கு விற்றது.
அதன்பிறகு கடந்த 4 நாட்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று கிலோ ரூ.100-க்கு விற்றது. சில்லரை கடைகளில், தக்காளி கிலோ ரூ.130 வரை விற்றதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல் கிலோ ரூ.75-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.84, ரூ.80-க்கு விற்ற நாட்டு கத்திரிக்காய் ரூ.100, ரூ.48 விற்ற அவரைக்காய் ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டது. புடலங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.55, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து தக்காளி குறைந்த அளவே வருகிறது. மராட்டிய மாநிலத்தில் இருந்து இன்னும் சில நாட்களில் தக்காளி லாரிகளில் கொண்டு வரப்பட உள்ளது என்றார்.
தக்காளி விலை சதம் அடித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் மீம்ஸ் வெளியிட்டு பகிர்ந்து வருகின்றனர்.