தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் கடத்திய5 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் கடத்திய5 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்காணிப்பு
சென்னை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு டி.ஜி.பி. அபாஷ்குமார் உத்தரவின் பேரில், மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தூத்துக்குடி மாவட்ட இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் தூத்துக்குடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடி பகுதியில் கலப்பட டீசல் விற்பனைக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் பழைய கட்டிடம் அமைந்து உள்ள பகுதியில் சோதனை செய்தனர். அங்கு 3 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த லாரிகளில் டீசல் போன்ற திரவத்தை மாற்றும் பணியில் சிலர் ஈடுபட்டு இருந்தனர். உடனடியாக போலீசார் அந்த லாரிகளில் சோதனை செய்தனர்.
கலப்பட டீசல்
அப்போது ஒரு டேங்கர் லாரியில் 26 ஆயிரம் லிட்டர் டீசல் போன்ற திரவம் (கலப்பட டீசல்) இருந்தது. மற்ற 2 லாரிகளில் 20 பேரல்களில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருந்தது. உடனடியாக போலீசார் கலப்பட டீசல் விற்பனைக்கு கொண்டு வந்ததாக, ஈரோடு பெரியபாளையத்தை சேர்ந்த சேகர் மகன் லட்சுமணன் (வயது 32), தூத்துக்குடி மினிசகாயபுரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் ராமர் (30), தூத்துக்குடி சாந்திநகரை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பாலமுருகன் (20), பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த பாலையா மகன் பாலாஜி என்ற பாலா (21), மகராஜநகரை சேர்ந்த தனபால் மகன் அருள்ராஜ் என்ற தனுஷ் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் சாலோமின், மணிகண்டன், ரீகன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
----------