அழகாபுரி குடகனாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணையில் இருந்து பாசனத்திற்கு அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் 27 அடி உயரமுள்ள குடகனாறு அணை உள்ளது. இந்த அணையால் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் விவசாய நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
இந்த அணைக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததாலும், காமராஜர் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்பட்டதாலும் குடகனாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 22.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 87 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.
தண்ணீர் திறப்பு
இந்நிலையில் நேற்று காலை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் ஆகியோர் குடகனாறு அணையின் மதகை இயக்கி வலதுபுற வாய்க்கால் மூலம் பாசனத்துக்கு தண்ணீரை திறந்து விட்டனர். இதன்படி வாய்க்கால் மூலம் வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி, கல்வார்பட்டி, கூம்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி, பெரியமஞ்சுவெளி, ஈசநத்தம், ஆத்துமேடு, வெஞ்சமகூடலூர், மலைக்கோவிலூர், நாகம்பள்ளி மற்றும் அரவக்குறிச்சி தாலுகா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வேடசந்தூர் வீரா.சாமிநாதன்(தெற்கு), கவிதாபார்த்திபன்(வடக்கு), நகர செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஜீவா, இளைஞர் அணி மாவட்ட துணைச்செயலாளர் ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.