திருச்செந்தூர் அருகே சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பால் வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்
திருச்செந்தூர் அருகே சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பால் வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக பால் வியாபாரி, அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பால் வியாபாரி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில், பால் வியாபாரி. காயாமொழி ராமநாதபுரம் தெருவைச் சேர்ந்தவர் பொன் சூர்யா. இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
செந்திலுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்தது. அந்த பெண்ணின் வீட்டை மற்றொருவர் பெயருக்கு எழுதி தருமாறு கூறி செந்தில் மிரட்டியதாக கூறப்படுகிறது.
பாலியல் தொல்லை
சம்பவத்தன்று அந்த பெண்ணின் 11 வயது மகளை செந்தில், பொன் சூர்யா ஆகிய 2 பேரும் காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுமியை அவளது வீட்டின் அருகில் இறக்கி விட்டு சென்றனர்.
இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறி கதறி அழுதாள். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், செந்தில், பொன் சூர்யா ஆகிய 2 பேர் மீதும் ஆள் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.