தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள 4 கால்வாய்களையும் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள 4 கால்வாய்களையும் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

Update: 2021-11-22 12:13 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள 4 கால்வாய்களையும் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
யூரியா உரம்
விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு 1,222 டன் யூரியா வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று ஸ்பிக் நிறுவனம் சார்பில் 400 டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இப்கோ மூலம் 350 டன் யூரியா உரம் வர உள்ளது. எனவே, மாவட்டத்தில் யூரியா உரத்தட்டுப்பாடு இல்லை. தேவைக்கு ஏற்ப கூடுதல் உரம் ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
வீணாக செல்லும் தண்ணீர்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் 4 பிரதான கால்வாய்கள் உள்ளன. இதில் மருதூர் கீழக்காலில் 1000 கன அடி, மேலக்காலில் 450 கன அடி, ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்காலில் தலா 500 கனஅடி தண்ணீர் தான் கொண்டு செல்ல முடியும்.
தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 70 ஆயிரம் முதல் 90 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் திறன் உள்ளது. மழைக்காலங்களில் 20 நாட்களுக்கு மேல் ஆற்றில் 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. 4 பிரதான கால்வாய்கள் மூலம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் தான் எடுக்க முடிகிறது. மீதமுள்ள தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. 
கால்வாய்களை அகலப்படுத்த...
இதனை தடுக்க 4 பிரதான கால்வாய்களையும் அகலப்படுத்தி கொள்ளளவை அதிகரிப்பது தான் ஒரே வழி ஆகும்.
இதனால் 4 பிரதான கால்வாய்களையும் 6 ஆயிரம் கன அடி முதல் 8 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் செல்லும் வகையில்  அகலப்படுத்த வேண்டும். 
இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி, நிதி ஒதுக்கீடு கிடைத்ததும், தேவையான நிலங்களை கையகப்படுத்தி கால்வாய்களை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

மேலும் செய்திகள்