‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-22 12:00 GMT
குரங்குகள் அட்டகாசம்

திருவள்ளூர் மாவட்டம் வைவாசி கண்டிகை வெள்ளியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் தாங்க முடியாமல் உள்ளது. கேபிள் வயர்களில் தொங்குவது, வீட்டு தோட்டத்தை நாசப்படுத்துவது என்று தினமும் இம்சை கொடுத்து வருகின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து சென்று வனப்பகுதிகளில் விடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

- சினேகா, வெள்ளியூர்.



முறையற்ற மழைநீர் கட்டமைப்பு

தாம்பரம் சேலையூர் இந்திராநகர் சந்திப்பு கற்பகம் நகர்-பகவதி நகர் மெயின் ரோட்டில் உள்ள மழைநீர் கட்டமைப்பு முறையாக இல்லை. அதாவது மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படும்போது அதனை சரி செய்வதற்காக குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்படும் மூடி போன்ற அமைப்பு சாலை மட்டத்தை விட அரை அடி உயரத்தில் உள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது.பாதசாரிகள் சற்று கவனம் தவறினாலும் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் கால்வாய் மூடியை சாலை மட்டத்துக்கு அமைத்து விபத்துகளை தடுக்கவேண்டும்.

- சுதர்சன், சேலையூர்.



மின்கம்பம் சேதம்

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் போஸ்ட் கபிலர் நகர் தீரன் சிவலிங்கம் குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பத்தில் காங்கீரிட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழலாம். எனவே, மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-எஸ்.சீனிவாசமூர்த்தி, மணவாளநகர்.

தெருநாய்கள் தொல்லை

தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை சாலை பிள்ளையார்கோவில் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் செல்பவர்களை விரட்டுகிறது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும் விரட்டுகிறது. இதனால் அச்சத்துடன் வெளியே சென்று வரும் நிலை உள்ளது. இரவில் குரைத்து கொண்டே இருக்கின்றன. இதனால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

- பிள்ளையார்கோவில் தெரு மக்கள்.

‘டிரான்ஸ்பார்மர்’ அடிக்கடி பழுது

சென்னை மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட வடபெரும்பாக்கம் 17-வது வார்டு ரேஷன் கடை அருகில் உள்ள ‘டிரான்ஸ்பார்மர்’ பழுதடைந்ததால் கடந்த மாதம் புதிதாக மாற்றினார்கள். ஆனால் இந்த டிரான்ஸ்பார்மரும் அவ்வப்போது பழுதடைந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடையும் நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் நிலவும் மின்சார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

-பொதுமக்கள், வடபெரும்பாக்கம்.


பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி ஜி.எஸ்.டி. சாலை சர்வீஸ் ரோட்டில் மேம்பாலம் அருகே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அந்த சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து கரடு-முரடாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே செல்லும் நிலைமை உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. எனவே இந்த பள்ளத்தை சீரமைத்து தரவேண்டும்.

- வாகன ஓட்டிகள்.



குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா?

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுராந்தோட்டம் தெருவில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக வருவதில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் தான் தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீரும் ஒழுங்காக வருவதில்லை. கலங்களாக வருகிறது. இப்பிரச்சினைக்கு காஞ்சீபுரம் பெருநகராட்சி உரிய தீர்வு காண வேண்டும்.

சு.வெங்கடேசன், காஞ்சீபுரம்.

வளைந்த மின்கம்பம் நேராகுமா?

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சி மின்சார அலுவலம் பின்புறம் உள்ள சீனிவாச நகரில் உள்ள மின்கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசினால் இந்த மின்கம்பம் சாய்ந்துவிடும் ஆபத்து உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-சாரங்கப்பாணி, மாங்காடு.

இன்னும் வடியாத மழைநீர்

சென்னை கொரட்டூர் பவானிநகர் பாலாஜி நகரில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. இந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் தேங்கி வடியாமல் உள்ள மழைநீரை மோட்டார்களை பயன்படுத்தி மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

-சதீஷ்குமார், கொரட்டூர்.


தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படுமா?

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம் தீட்டித்தோட்டம் 4-வது தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி முதியோர் மற்றும் வீடற்றோர் காப்பகம் அருகில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு 2 பள்ளங்கள் தோண்டினார்கள். ஆனால் டிரான்ஸ்பார்மரும் அமைக்கப்படவில்லை. பள்ளமும் மூடப்படவில்லை. அதிகாரிகள் கவனிப்பார்களா?

பொதுமக்கள், கொளத்தூர்.


கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை ஊராட்சி தியாகி சொக்கலிங்கநாதர் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்காமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுமக்கள், நசரத்பேட்டை ஊராட்சி.



மேலும் செய்திகள்