மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் உயிரிழந்தார்.
சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45) கொத்தனார். இவர் தனது உறவினரான பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த சாந்தி (55) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு எண்ணூர் விரைவு சாலை எம்.ஆர்.எப். சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த சாந்தி, ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த திருவொற்றியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தனது சொந்த காரில் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாந்தி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் நவீன்குமார் (45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.