ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீமூலக்கரை பகுதி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீமூலக்கரை பகுதி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்

Update: 2021-11-22 10:54 GMT
தூத்துக்குடி, நவ.23-
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில்  கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ரீமூலக்கரை பகுதி கிராமமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளும், இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலை மற்றும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் மனு கொடுத்த ஒரு பயனாளிக்கு வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் ஜவுளி வியாபாரம் செய்வதற்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்மலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனி வேலாயுதம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கல்குவாரி
தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் தனியார் கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த குவாரி அமைக்கப்பட்டால், ஸ்ரீமூலக்கரை, வீரன் சுந்தரலிங்கம் நகர், அம்மானியா நகர், பேட்மாநகரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் உரிய விதிமுறைகளின்படி பொதுமக்களிடம், பொது இடத்தில் வைத்து கருத்து கேட்காமல் அனுமதி வழங்கப்பட்டு உள்ள கல்குவாரியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், என்று கூறி உள்ளனர்.
நிலத்தை மீட்க வேண்டும்
தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் காந்தி மள்ளர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் தரை புஞ்சை தரிசு, பஞ்சமி நிலம் பல லட்சம் ஏக்கர் உள்ளது. இதனை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். அதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.
எட்டயபுரம் மக்கள் ராஜ் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எட்டயபுரம் பஸ் நிலையத்தில் உள்ளே சில பஸ்கள் வராமல், தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகினறன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் அனைத்து பஸ்களும் எட்டயபுரம் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.
தலைவர் தேர்வு முறை
காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் நடக்கும்போது பொதுமக்கள் நேரடியாக ஓட்டு போட்டு தலைவரை தேர்ந்தெடுத்தால், தேர்வு செய்யப்பட்ட தலைவர் நேர்மையாக செயல்பட வாய்ப்பு உள்ளது. உறுப்பினர்கள் தேர்வு செய்யும் போது, பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆகையால் உள்ளாட்சி மன்ற தலைவரை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை அமல்படுத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும், என்று கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்