தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விமான நிலைய ஒப்பந்த பெண் ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விமான நிலைய ஒப்பந்த பெண் ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் பொன் இசக்கி (வயது 30). இவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், அங்கு பணியாற்றிய ஒருவருக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் வாங்கிய நபர், பொன் இசக்கியை மிரட்டினாராம். இது தொடர்பாக முறப்பநாடு போலீசில் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவர் மீண்டும் பொன் இசக்கியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த பொன் இசக்கி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க , தனது குழந்தை மற்றும் தாயுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொன் இசக்கியை மீட்டு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.