கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி சாவு சாவில் சந்தேகம் என உறவினர்கள் புகார்

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி இறந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2021-11-22 07:09 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி இறந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
தொழிலாளி 
கிருஷ்ணகிரி அருகே உள்ள சவுளூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ராஜப்பா விடுமுறை நாட்களில் கே.ஆர்.பி. அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடிக்க கே.ஆர்.பி. அணைக்கு சென்ற ராஜப்பா நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் நேற்று காலை அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு சென்று பார்த்தனர்.
பிணமாக கிடந்தார் 
அப்போது மீன் பிடி வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி ராஜப்பா இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து உறவினர்கள் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராஜப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜப்பாவின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், மீன் பிடிக்க சென்ற ராஜப்பாவை கொலை செய்திருக்கலாம் என்று உறவினர்கள் புகார் கூறினர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்