வாணியம்பாடியில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததால் பொதுமக்கள் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததால் பொதுமக்கள் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் சாலை மறியல்
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக நகர பகுதியில் உள்ள கல்லாறு, சின்னாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தமிழக, ஆந்திர எல்லைப் பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக, பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக ஷாகிராபாத்- பெரியபேட்டையை இணைக்கும் பாலம், முஸ்லிம்பூர்-கோட்டை பகுதியை இணைக்கும் பாலம், சி.எல் சாலை- பஜார் பகுதியை இணைக்கும் பாலம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது.
நியூ டவுன் திருவள்ளுவர் தெரு, திருவள்ளுவர் நகர் மற்றும் பைபாஸ் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்றாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், நகராட்சி துறை அதிகாரிகளும் மெத்தனம் காட்டுவதாகவும், தண்ணீரை அகற்ற கோரியும் திடீரென நேற்று காலை 11 மணி அளவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இருபுறமும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. கோ. செந்தில்குமார், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சாரதி குமார், திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராஜி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றுவதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.
மற்றொரு இடம்
இதேபோல் வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும், நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் ராமநாயக்கன்பேட்டை- வாணியம்பாடி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.