சிவகிரி அருகே மூழ்கும் நிலையில் நொய்யல் ஆற்றுப்பாலம்; உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
சிவகிரி அருகே மூழ்கும் நிலையில் நொய்யல் ஆற்றுப்பாலம் உள்ளதால் உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகிரி
சிவகிரி அருகே மூழ்கும் நிலையில் நொய்யல் ஆற்றுப்பாலம் உள்ளதால் உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு-கரூர்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இதன்காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் சிவகிரி அருகே அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவில் முன்பு நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆறு மூலம் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை செய்து வருகிறார்கள். மேலும் இங்கு ஈரோடு - கரூர் மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தரைப்பாலம் மூலம் ஈரோட்டில் இருந்து கரூருக்கும், கரூரில் இருந்து ஈரோட்டுக்கும் பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.
மாணவ-மாணவிகள்
இதனால் இந்த தரைப்பாலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் நொய்யல் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வருகிறது. இதனால் தரைமட்ட பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘இரண்டு மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய பாலமாக இந்த தரைமட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் மூலமாகத்தான் நாங்கள் எங்களுடைய விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு செல்கிறோம். மேலும் சிவகிரியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும், ஈரோட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள்.
அரசு அதிகாரிகள்
தற்போது நொய்யல் ஆற்றின் தரைமட்டப்பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது. தரைமட்டப்பாலம் மூழ்கினால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் மாணவ- மாணவிகளின் கல்வியும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. இங்கு உள்ள பெரும்பாலானவர்கள் விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்துகிறோம். இது குறித்து நாங்கள் பலமுறை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். ஆனால் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நொய்யல் ஆற்றுப்பாலத்தில் உயர் மட்ட பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.