மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மந்திரிகள் உதவ வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
தேர்தல் பிரசாரத்தை நிறுத்திவிட்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மந்திரிகள் உதவ வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பயிர்கள் சேதம்
கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால், பாதி மாநிலமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பா.ஜனதா அரசின் முதல்-மந்திரி உள்பட மந்திரிகள், ஜன ஸ்வராஜ் யாத்திரை என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு நாடகமாடுகிறார்கள். இது ஜன ஸ்வராஜ் யாத்திரை அல்ல, ஜன பார்பாத் யாத்திரை. மழைக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரம் எக்டேருக்கு மேல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
பல பகுதிகளில் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் அரசை நடத்துகிறவர்கள், தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் "ஹனிமூன்" காலம் முடிந்துவிட்டது. மந்திரிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்தை நிறுத்திவிட்டு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
கேட்க யாருமில்லை
மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய மந்திரிகளுக்கு, முதல்-மந்திரி உத்தரவிட வேண்டும். நெல், ராகி, சோளம், காய்கறிகள் போன்றவை நீரில் மூழ்கிவிட்டன. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விவசாயிகளின் கஷ்டங்களை கேட்க யாருமில்லை. இங்கு ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மழை சேதங்கள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி, உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மொத்த மழை சேதங்களை மதிப்பிட்டு மத்திய அரசிடம் நிவாரண உதவி கேட்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.