திருமணமான 4 மாதத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
துமகூரு அருகே திருமணமான 4 மாதத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.;
பெங்களூரு:
திருமணமாகி 4 மாதம்
துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா கெம்பசாகரா கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 27). இவரது மனைவி வரலட்சுமி (22). இந்த தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. கிராமத்தின் அருகேயே சிறிய பெட்டிக்கடை வைத்து முனிராஜ் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலையிலேயே கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வரலட்சுமி சென்றிருந்தார்.
பின்னர் கடைக்கு சென்ற முனிராஜ் தனது மனைவியை தொடர்பு கொண்டு, வீட்டுக்கு சென்று காலை உணவு சமைக்கும்படி கூறியதாக தெரிகிறது. பின்னர் சாப்பிடுவதற்காக முனிராஜ் வீட்டுக்கு சென்ற போது வரலட்சுமி வராமல் இருந்ததுடன், சமையலும் செய்யாமல் இருந்தார்.
தம்பதி தற்கொலை
இதனால் அவர் கடைக்கு திரும்பி சென்று விட்டார். இந்த நிலையில், பெற்றோர் வீட்டில் இருந்து திரும்பிய வரலட்சுமி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி முனிராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் விஷத்தை குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டின் மற்றொரு அறைக்கு சென்ற முனிராஜிம் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
தம்பதி என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. திருமணமாகி 4 மாதங்களே ஆனதால் முனிராஜிம், வரலட்சுமியும் சந்தோஷமாக தான் குடும்பம் நடத்தியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.