பொய் பேசுவதில் சித்தராமையாவுக்கு நோபல் பரிசு வழங்கலாம் - மந்திரி ஈசுவரப்பா கிண்டல்
பொய் பேசுவதில் சித்தராமையாவுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு:
ஊழல் புகார் இல்லை
கர்நாடக மேல்-சபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் கிராம ஸ்வராஜ் யாத்திரை என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பிரசார கூட்டம் மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி உலக தலைவராக வளர்ந்துவிட்டார். அத்துடன் பா.ஜனதாவையும் பெரிய கட்சியாக வளர்த்துள்ளார். சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியை விட பா.ஜனதா பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங், ஊழலில் உலகிலேயே முதல் இடத்தில் இருந்தார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மோடி மீது ஒரு ஊழல் புகார் கூட இல்லை. மன்மோகன்சிங் பிரதமராக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தபோது அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அவரை யாரும் வரவேற்கவில்லை. அவரை எங்கே ஒரு மூலையில் நிறுத்தி வைத்தனர்.
சித்தராமையாவுக்கு நோபல் பரிசு
ஆனால் மோடி வெளிநாடுகளுக்கு சென்றால், அதை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மோடி, ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி அவர் நடந்து கொண்டுள்ளார். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் ஆயுதப்படைகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு ஷோபா பேசினார்.
இதில் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பேசுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பொய் பேசுவதில் போட்டி போட்டு செயல்படுகிறார்கள். பொய் பேசுவதற்கு என்று நோபல் பரிசு வழங்கப்பட்டால், அதை சித்தராமையாவுக்கு வழங்கலாம். கொரோனா தடுப்பூசி வந்தபோது, அதுகுறித்து காங்கிரசார் தவறான பிரசாரம் செய்தனர். அதை போட்டுக் கொண்டால் ஆண்மை போய்விடும் என்றெல்லாம் கூறினர். இன்று அந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள போட்டி போடுகிறார்கள்" என்றார்.