மதுரை பெண் போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
மதுரையில் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பெண் போலீஸ் ஏட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மதுரை,
மதுரையில் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பெண் போலீஸ் ஏட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
பெண் போலீஸ் ஏட்டு
மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் வீரதங்காள். இவர் மதுரை தல்லாகுளம் குற்ற புலனாய்வு பிரிவில் ஏட்டாக (தலைமை காவலர்) பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரர் ஜீவா என்பவர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் எனக்கு 3 சகோதர- சகோதரிகள் உள்ளனர். இதற்கிடையே, என்னுடைய தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். தாயாருக்கு ஊமச்சிகுளம், விசாலாட்சிபுரம் வங்கிகளில் சேமிப்பு கணக்கு உள்ளது. வங்கி கணக்குகளில் மதுரை கருவனூர் கிராமத்தில் உள்ள பூர்வீக சொத்துக்களில் கிடைத்த வருமானத்தை முதலீடு செய்திருந்தார். அது தவிர மதுரை- திருச்சி சாலையில் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி பாதைக்காக அரசு வழங்கிய இழப்பீட்டு தொகை சுமார் ரூ.77 லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டு இருந்தது.
கையாடல்
இதனை அறிந்த எனது சகோதரியும், தலைமைக்காவலருமான வீரதங்காள், தாயாரின் வங்கி கணக்கு புத்தகங்களை கையகப்படுத்தி போலி ஆவணம் மூலமாக கையெழுத்து மோசடி செய்து விட்டார். மேலும் தாயாரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி வங்கி கிளையில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்து கையாடல் செய்து விட்டார். இதுபோல், போலி உயில் மற்றும் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி கையெழுத்து போட்டு பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி வீரதங்காளிடம் கேட்ட போது, தாயை கவனித்து வந்ததால் பணத்தை எடுத்து கொண்டதாகவும், சொத்தை எடுத்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் போலீசில் பணியாற்றுவதால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
பணிஇடை நீக்கம்
இது குறித்து மதுரை மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் வீரதங்காள் சுமார் ரூ.70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், பெண் போலீஸ் ஏட்டு வீரதங்காள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே, அவரை பணி இடை நீக்கம் செய்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவிட்டார்.