தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-21 19:01 GMT
திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், திறுவெறும்பூா் 65-வது வார்டு மலைக்கோவில் இந்திரா ந௧ர் பகுதியில் சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டி சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், இந்திராநகர், திருச்சி. 

சேறும், சகதியுமான சாலைகள் 
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், செம்பியக்குடி கிராமம் வடக்கு காலனி தெருவில் சாலை வசதி இல்லாததால் மழைபெய்யும்போது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வடக்கு காலனி, அரியலூர். 
இதேபோல் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், முள்ளால் கிராம், காலனித்தெருவில் கடந்த 9 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படவில்லை.  இதனால் தற்போது பெய்துள்ள மழையினால் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முள்ளால் கிராமம், திருச்சி. 
இதேபோல் திருச்சி காஜாமலை பெரியார் நகர் பகுதியில் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
 சகாபுதீன், காஜாமலை, திருச்சி. 
திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 63வது வார்டு மஞ்சத்திடல் கிராமம் ரெட்டியார் தெருவில் உள்ளே நுழையும் இடத்திலும் மாநகராட்சி துவக்கப்பள்ளி அமைந்திருக்கும் இடத்திலும் சேறும், சகதியுமாக இருப்பதால் பள்ளி செல்லும் மாணவர்களும்,  பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மஞ்சத்திடல், திருச்சி. 

தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம் 
பெரம்பலூர் நான்கு ரோடு புதிய பஸ் நிலையம்  பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும் துரத்துவதினால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாலையில் வாகனங்கள் செல்லும்போது தெருநாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரம்பலூர். 

பஸ் வசதி வேண்டும் 
கரூர் மாவட்டம், பாகநத்தம் கிராமம், நொச்சிப்பட்டியில் 150க்கும் மேற்ப்பட்ட விவசாய குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்யவும், இப்பகுதி மக்கள் வெளியூருக்கு கூலி வேலைக்கு செல்லவும், அரசு, தனியார் ஊழியர்கள் வேலைக்கு செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்லவும் முறையாக பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
காந்திபாபு, நொச்சிப்பட்டி, கரூர். 

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து 
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட துஞ்சனூர் ஊராட்சியில் உள்ள சித்தக்கூர் சாலையில் உள்ள மின் கம்பங்கள் அனைத்தும் சிறுவர்கள் தொடும் அளவிற்கு தாழ்வாக தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது மின்கம்பிகளில் உரசி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மின்சார வாரியத்தினர் சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், துஞ்சனூர், புதுக்கோட்டை. 

பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள புதுத்தெரு 1-ம் வீதி, கோல்டன்நகர், இஸ்மாயில் நகர், குறிஞ்சிநகர், உப்புகாரத்தெரு, பள்ளிவாசல்தெரு, பழையகடைவீதி உள்ளிட்ட குடியிருப்புகள், கடைவீதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் குரங்குகள் நுழைந்து, வீடுகளில் உள்ள பொருட்களை நாசம் செய்கின்றன. மேலும், வீடுகளில் புகுந்து காய்கறிகள், துணிகளை எடுத்துக்கொண்டு ஓடி விடுகின்றன. குடியிருப்புப் பகுதிகளை குரங்குகள் சுற்றி வருவதால், வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு பொருட்களுடன் செல்லும் சிறுவர்களை, குரங்குகள் விரட்டி சென்று உணவு பொருட்களை பிடுங்கி விடுகின்றன.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அன்னவாசல், புதுக்கோட்டை. 

சாலையில் திரியும் குதிரை, மாடுகள் 
திருச்சியில் பொன்நகர், செல்வநகர், கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளும், பசுமாடுகளும், குதிரைகளும் சுற்றித்திரிகின்றது. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் சாலையில் சுற்றித்திரியும்போது அவை எங்கு தங்களை முட்டிவிடுமோ என்ற அச்சத்திலேயே பொதுமக்கள் சாலையில் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மார்டின், செல்வநகர், திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
திருச்சி ஆழ்வார்தோப்பு செல்லும் வழியில்  ஓ பாலம் சாக்கடை கழிவுநீரால் தினமும் நிரம்பி போக்குவரத்துக்கு மிகுந்த  சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி.  

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நாச்சிகுறிச்சி பஞ்சாயத்து  இணியனூர் கிராமத்தில் சாலையோரம் குப்பைகள், மருத்துவக்கழிவுகள், மின்சாதன கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் இந்த குப்பைகளை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இணியனூர், திருச்சி. 

நாய்களால் பொதுமக்கள் அச்சம் 
திருச்சி பெரிய மிளகுப்பாறை பகுதியில் ஏராளமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவற்றில் ஒரு சில நாய்கள் உடலில் சிறங்கு வைத்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றிற்கு வெறி பிடித்து இருக்கிறதா? என்பது தெரியவில்லை. மேலும் இவை மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாலையில் குழந்தைகள் நடந்து செல்லும்போது அவர்களை கடிக்க வருவதுபோல் துரத்துகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரியமிளகுப்பாறை, திருச்சி. 

மேலும் செய்திகள்