அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டில் இறைச்சிக்காக வேட்டையாடப்படும் மாடுகள் வனத்துறையினர் கவனிப்பார்களா?
அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டில் மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன. இதை வனத்துறையினர் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிராம்பட்டினம்:-
அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டில் மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன. இதை வனத்துறையினர் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காட்டில் விடப்பட்ட மாடுகள்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமானோர் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். இவர்களுடைய மாடுகள் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டில் மேய செல்வது வழக்கம். இதில் பல மாடுகள் காட்டின் மைய பகுதிக்கு சென்று விடுகின்றன. இந்த மாடுகளை வீடுகளுக்கு அழைத்து வருவது கடினம். இதன் காரணமாக ஏராளமான மாடுகள் காட்டிலேயே வசித்து வருகின்றன.
இத்தகைய மாடுகளை தேட முடியாமல் கால்நடை வளர்ப்போர் காட்டிலேயே விட்டு விடுகின்றனர். தற்போது அலையாத்திக்காட்டில் நூற்றுக்கணக்கான மாடுகள் வசித்து வருகின்றன.
மாடுகள் வேட்டை
காட்டின் மைய பகுதியில் இருந்து மாடுகள் வெளியே வரும் நேரத்தில் அவற்றை சிலர் இறைச்சிக்காக வேட்டையாடி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதை வனத்துறை அதிகாரிகள் கவனித்து அலையாத்தி காட்டுப்பகுதியில் வசித்து வரும் மாடுகளை பாதுகாக்கவும், அவற்றை வேட்டையாடுபவர்களை கண்டறியவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.