கற்கால இரும்பு உருக்கு ஆலை கழிவுகள் கண்டெடுப்பு
ிவகங்கை அருகே கண்மாய் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு ஆலை கழிவு கண்டெடுக்கப்பட்டு உள்ளது
சிவகங்கை,
சிவகங்கை அருகே கண்மாய் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்கு ஆலை கழிவு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
உருக்கு ஆலை
சிவகங்கை தொல் நடை குழுவைச் சேர்ந்த அரசனேரி கீழமேடு சரவணன், பேச்சி குளம் கண்மாய் பகுதியில் வித்தியாசமான கற்கள் கிடப்பதாக சிவகங்கை தொல் நடைக் குழுவிற்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா. சுந்தரராஜன் செயலர் நரசிம்மன் மற்றும் சேதுபதி, பிரவீன், கார்த்தி ஆகியோர் அந்த இடத்தில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அந்த பகுதியில் பெருங்கற் காலத்தில் இரும்பு உருக்கு ஆலை இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா கூறியதாவது:-
பெருங்கற்காலத்தில் இரும்பை உருக்கும் அறிவை தமிழர்கள் பெற்றிருந்தனர். ஒவ்வொரு சிற்றூர் பகுதிகளிலும் தமக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய இயற்கை சார்ந்த சூழலை அன்றைய மக்கள் பெற்நு இருந்தனர் தமக்கு தேவையான பானைகளை வளைந்து கொள்ளுதல் மர வேலைகளை செய்து கொள்ளுதல் போன்றவற்றை காண முடிகின்றன. அதேபோல இரும்பு உருக்கும் தொழில் நுட்பத்தையும் தமிழ்நாடு முழுமையாக பெருங்கற்காலத்தில் பரவலாக மக்கள் பயன்படுத்தியமை ஆய்வுகளால் தென்படுகின்றன.
மூலப்பொருள்
தரையோடு ஒட்டியதாக வட்டவடிவிலான உலைகள் சிதைவுற்ற நிலையில் காணப்படுகின்றன. இவை பேச்சிகுளம் கண்மாய் பகுதியில் தண்ணீருக்குள்ளும் தரையிலும் கிடைக் கின்றன. இரும்பை செம்பிராங்கல் போன்ற கல்லாலான மூலப் பொருளில் இருந்து பிரித்து எடுத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் அவைகளை இந்த உலைகள் மூலம் கொதி நிலைக்கு கொண்டு வந்து கற்களில் இருந்து இரும்பை பிரித்தெடுத்து இருக்கலாம். அப்படியான குவியல்கள் இரும்பு கழிவு குவியல்களாக இங்கு கிடைக்கின்றன.
சுடுமண்ணால் ஆன குழாய்கள் சிதைவுற்று காணப் படுகின்றன. இவை உலை அமைப்புகளை எரியூட்டுவதற்காக துருத்தி போல தூரத்தில் இருந்து காற்று கொண்டுபோக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். மேலும் இரும்புகளை உருக்கி கம்பி வடிவமாக கருவிகள் செய்வதற்கும் குழாய் அமைப்பை பயன்படுத்தி இருக்கலாம்.
சிவகங்கையை அடுத்த விரிவாக்க பகுதியாக இது இருந்தாலும் அரசன் ஏரி கீழமேடு என்பது அரசனையும் தொன்மை சார்ந்த மேட்டையும் குறிப்பதாக கருதமுடிகிறது. மேலும் இந்த பேச்சிகுளம் கண்மாயை ஒட்டியுள்ள காளி முனீஸ்வரர் கோவில் போன்ற பகுதிகளிலும் பழமையான ஓடுகள் சிதைந்த நிலையில் பெருவாரியாக தரை மேற்பரப்பில் காணப்படுகின்றன.
ஆய்வு
இப்பகுதி மக்கள் இரும்பு கழிவுகள் நிறைந்து கிடைக்கக்கூடிய இந்த மேட்டுப் பகுதியை கல்லங்குத்தல் என பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். மேலும் புதுக்கோட்டை பகுதியில் இரும்பு உருக்கு ஆலைகள் தொடர்ச்சியாக இருந்ததற்கான சான்றாக 13-ம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வீரபாண்டியன் காலக் கல்வெட்டு செய்தியும் புதுக்கோட்டை சமஸ்தான புள்ளி விவர செய்தி குறிப்பும் ஆய்வாளர்களால் குறிப்பிடப் பட்டு உள்ளன. இவற்றை தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தி பாதுகாக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.